×

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மூலிகைத் தோட்டம்: முதன்முறையாக அமைக்க நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பூங்காவாகும். இந்த பூங்கா தற்போது எதிர்வரும் சீசனுக்காக அதாவது ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக தயாராகி வருகின்றது. தற்போது மலர் நாற்றுகள் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. டேலியா உள்ளிட்ட உயர்ரக மலர் நாற்றுகள் தற்போது நிலவிவரும் கடும் குளிர் காரணமாக தாமதமாக நடப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி உத்தரவுப்படி ஊட்டி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து உயர் ரக மலர் செடிகள் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போதுவரை ஆறாயிரம் உயர் ஒட்டு ரக மலர் செடிகள் வாங்கப்பட்டு இரண்டு கட்டங்களாக நடப்பட்டு உள்ளது. விதைகள் இந்த குளிர் சீசனுக்கு பிறகு நடப்படும். டேலியா மற்றும் ஒட்டு உயர்ரக மலர் விதைகளுக்காக மலர் பாத்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நட்ட மலர் செடிகள் நல்ல முறையில் வந்துள்ளது. வரும் சீசனுக்கு பிரையன்ட் பூங்கா மலர்கள் நிறைந்து சிறப்பாக இருக்கும். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 15 ஏக்கர் அளவிற்கு தான் இதுவரை மலர் தோட்டங்கள் உள்ளன. இந்த ஆண்டு இரண்டரை ஏக்கர் கூடுதலாக மலர் பாத்திகள் தயாரிக்கப்பட்டு மலர் செடிகள் நடப்பட்டு வருகின்றன. முதல்முறையாக இந்த பூங்காவில் மூலிகை தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கிடைக்கக் கூடிய மூலிகைகள் இந்த மலர் தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். சுற்றுலா பயணிகள் பார்வைக்கும் ஏற்பாடு செய்யப்படும். இரண்டாம் கட்டமாக 3 ஆயிரம் வீரிய ஒட்டு ரக டேலியாக்கள் பல வண்ண நிறத்தில் பூப்பதற்கு ஏற்ப நாற்றுகள் நடப்பட்டு வருகிறது. 59வது ஆண்டு மலர் கண்காட்சிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது. இந்தப் பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளின் தோட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகவலை தோட்டக்கலை துறை அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.

Tags : Herbal Garden ,Kodaikanal Bryant Park: Action ,Bryant Park ,Kodaikanal ,Herb Garden , Herb Garden , Bryant Park, Kodaikanal
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்